குறைவான வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்: கனடா பிரதமர் ஜஸ்டின்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்ற எண்ணிக்கையில் (immigration) அதிரடி குறைப்பு பற்றிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட குறைப்பினை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதிகளின் (Student Visa) எண்ணிக்கையை கட்டுப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் 2025 முதல் குடியேற்ற எண்களைக் குறைக்கும் என்றும், உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்த முடியாது என்பதற்கான காரணத்தைக்கூறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான விதிகளை அறிவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
Twitter Post
We're going to have fewer temporary foreign workers in Canada. We're bringing in stricter rules for companies to prove why they can't hire Canadian workers first.— Justin Trudeau (@JustinTrudeau) October 23, 2024
புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
"கனடாவில் நாங்கள் குறைவான தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கப் போகிறோம். கனேடிய தொழிலாளர்களை ஏன் முதலில் பணியமர்த்த முடியாது என்பதை நிரூபிக்க நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்," என்று ஜஸ்டின் புதன்கிழமை ட்வீட் செய்தார். இந்நடவடிக்கையானது புலம்பெயர்ந்தோர் வேலை பெற்று நாட்டில் குடியேறுவதை மிகவும் கடினமாக்கும். ராய்ட்டர்ஸ் அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டில் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026இல் 380,000 மற்றும் 2027இல் 365,000 பேரை கொண்டிருக்கும் எனவும், அது, இந்த ஆண்டின் 485,000 பேரை விட குறைவாகும் என்று கனேடிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிலையை மேம்படுத்த புலம்பெயர்பவர்களை வரவேற்ற கனடா
சில ஆண்டுகள் முன்பு வரை, கனடா தனது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டிலிருந்து புலம்பெயர்பவர்களை இருகரம் நீட்டி வரவேற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், ட்ரூடோ அரசாங்கம் கனேடியர்களின் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது, ஏனெனில் அதிக புலம்பெயர்பவர்களால், உள்ளூர் விலைகள் அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், பல கனேடியர்கள் வீட்டு நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். குடியேற்றவாசிகளின் வருகையும் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது, இது நாட்டின் மக்கள்தொகையை விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளது, மேலும் வீட்டுத் தேவை மற்றும் விலைகளை மேலும் அதிகரிக்கிறது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.