Page Loader
காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது

காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது

எழுதியவர் Sindhuja SM
May 04, 2024
10:01 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களைக் கைது செய்துள்ளதாக கனேடிய காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்ததில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சிதைந்தன. ஆனால், கனடாவின் இந்த குற்றசாட்டுகளை "அபத்தமானது" என்று கூறி இந்தியா மறுத்துவிட்டது. இந்நிலையில், தற்போது கரன் பிரார்(22), கமல்ப்ரீத் சிங்(22) கரன்ப்ரீத் சிங்(28) ஆகிய 3 இந்தியர்களை கனடா கைது செய்துள்ளது.

கனடா 

கொலைக்கு சதி செய்ததாக வழக்கு பதிவு

இவர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக ஆல்பர்ட்டாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக வசிக்கவில்லை என்று ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவை வழிநடத்தும் கண்காணிப்பாளர் மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்களது புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் எவரும் தங்களுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை என்றும், இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு "மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது" என்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) உதவி ஆணையர் டேவிட் டெபூல் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.