கலிபோர்னியாவை மூழ்கடிக்கும் வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள்
சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கடும் வறட்சியால் தவித்து கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் ஆரம்பித்த போது கலிபோர்னியாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த வெள்ளம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. புயலாலும் மழையாலும் அந்த பகுதியில் இருக்கும் சலியான்ஸ் என்ற நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கலிபோர்னியாவில் 10 முதல் 20 அங்குலங்கள் நீர் நிரம்பியுள்ளது. கடந்த புதன்கிழமை சோனோமா கவுண்டி என்ற பகுதியில் நீரில் மூழ்கிய வாகனத்தில் 43 வயது பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
'ஆன் தி வே'யில் இன்னும் 2 புயல்கள்
பாசோ ரோபில்ஸ் நகருக்கு அருகில், ஐந்து வயதுடைய கைல் டோன் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். அவனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிக நாட்களாக வறட்சியுடன் இருந்தததால், கலிபோர்னியாவில் இருக்கும் நிலங்களால் அதிக மழைநீரை உறிஞ்ச முடியாது என்று கூறப்படுகிறது. அந்த மாகாணத்தின் கவர்னர் கவின் நியூசோம் அலுவலகத்தின்படி, இந்த ஆண்டு குளிர்கால புயல்களில் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வார இறுதியில் இன்னும் இரண்டு புயல்கள் அந்த மாகாணத்தை தாக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் வெள்ளத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கலிபோர்னியா மக்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.