சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்
பிரிட்டனின் பெரும் செல்வந்தரான இந்திய வம்சாவளி ஹிந்துஜா குடும்பம், சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா லெக் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டு இந்திய உதவியாளருக்கு அவர்கள் மிகக் குறைந்த ஊதியம் வழங்கியதாகக் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஹிந்துஜாக்கள் 18 மணி நேர வேலைக்காக ஒரு ஊழியருக்கு வெறும் ஏழு சுவிஸ் பிராங்குகள் (தோராயமாக £6.19) கொடுத்ததாக அரசுத் தரப்பு கூறுகிறது. மேலும் அந்த ஊழியரின் பாஸ்போர்ட்டை ஹிந்துஜாக்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஹிந்துஜா குடும்பம் நீதிமன்ற செலவில் 1 மில்லியன் பிராங்குகள் மற்றும் ஊழியர்களுக்கான இழப்பீட்டு நிதியாக 3.5 மில்லியன் பிராங்குகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
பணியாளை விட செல்ல நாய்க்கு அதிகம் செலவு செய்யும் கோடீஸ்வர குடும்பம்
ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகிய நான்கு பேரை உள்ளடக்கிய மனித கடத்தல் வழக்கு விசாரணை திங்கள்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கியது. இந்த விசாரணையில் ஹிந்துஜா குடும்பம், ஊழியர்களின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேற தடை விதித்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு இந்தியாவில் உள்ள அவர்கள் வீட்டிற்கு இந்திய ரூபாயில் ஊதியம் வழங்கப்பட்டது. எனினும் சுவிஸ்சர்லாந்தில் அவர்கள் கையிருப்புக்கு பணம் வழங்கப்படுவதில்லை என கூறப்பட்டது. ஹிந்துஜா குடும்பம், வீட்டு ஊழியரை விட தங்கள் செல்ல நாய்க்காக அதிக செலவு செய்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.