சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்தது கனடாவின் பிராம்ப்டன் நகராட்சி
கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள பிராம்ப்டன் நகரம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடை செய்த கனடாவின் இரண்டாவது நகராட்சியாக மாறியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நகர சபையால் நிறைவேற்றப்பட்டு, ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. "தெற்காசியா, கரீபியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை சேர்ந்த பல்வேறு சமூகங்கள் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன" என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு பிரேரணையை நிறைவேற்றிய முதல் நகராட்சியாக பிராம்ப்டன் மாறியுள்ளது.
சாதி பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதல் நகராட்சி
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கனடாவின் முதல் நகராட்சி ஆகும். இது தொடர்பான பிரேரணை கடந்த ஏப்ரல் மாதம் மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபை உறுப்பினர் சவ் தலிவால் கூறி இருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளி வாரியமான டொராண்டோ மாவட்ட பள்ளி வாரியம்(TDSB) இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும், சாதிய பாகுபாடுக்கு எதிராக ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று TDSB, ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்திற்கு பரிந்துரைந்திருந்தது.
இந்த காலவரிசையைப் பகிரவும்