பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
டென்மார்க்கில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம்(DVFA) தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்து தென்மேற்கே சுமார் 188 கிமீ தொலைவில் இருக்கும் அகஸ்டன்போர்க்கில் உள்ள ஒரு பண்ணையில் அதிக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளையும் அடுத்த சில நாட்களில் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமையுடன் இணைந்து DVFA கருணைக்கொலை செய்ய இருக்கிறது. "பறவைக் காய்ச்சலினால் ஏற்படும் ஆபத்து குறைந்துள்ளது. ஆனால், அகஸ்டன்போர்க்கில் இருந்து மீண்டும் பரவ தொடங்கலாம்" என்று DVFA இன் கால்நடை இயக்குனர் சைன் ஹெவிட்-நீல்சன் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டில் பதிவாகும் நான்காவது பெரும் பரவல்
10 கிலோ மீட்டருக்கு மேல், DVFA இன் சிறப்பு அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை நகர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மண்டலத்திற்குள் உள்ள அனைத்து கோழி உரிமையாளர்களும் தங்கள் பறவை மந்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. DVFAஇன் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு டென்மார்க்கில் பதிவாகும் பறவைக் காய்ச்சலின் நான்காவது பெரும் பரவல் இதுவாகும். ஜனவரி மாதம் ஒரு பெரிய கோழி பண்ணையிலும், பிப்ரவரி மாதம் ஒரு வான்கோழி பண்ணையிலும், மார்ச் மாதம் ஒரு சிறிய கோழி பண்ணையிலும் அதிக பரவல் ஏற்பட்டது. இதனால், சுமார் 65,000 பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டன. தற்போது 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன.