தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!
அமெரிக்க அதிபர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, தன்பாலின(Same sex) ஈர்ப்பாளர் திருமணங்கள் மற்றும் கலப்பின(Inter-racial) திருமணங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார். இது குறித்து பேசிய பைடன், "இந்த சட்டமும் இதனால் பாதுகாக்கப்படும் அன்பும் எல்லா விதமான வெறுப்புகளையும் தகர்த்து எறிந்து விடும்" என்று கூறி இருக்கிறார். சில ஆண்டுகளாகவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகிறது. இந்த வகையில், 2015 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரே பாலின திருமணங்கள் இனி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்தது. இது போன்ற திருமணங்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போது அமெரிக்க அரசால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்திய தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டம்- ஒரு அப்டேட்!
சமீப காலமாக இந்தியாவில் பரவலாக ஒரே பாலின திருமணங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது போன்ற திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்றும் சேர்ந்து வாழ்பவர்கள் (living together) பாதுகாப்பிற்குக் கீழ் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதை திருமணங்களாக சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று பலதரப்பினர் நாடு முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்லி உயர் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களில் இது தொடர்பான மனுக்கள் நிலுவையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கும் இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றவும் பல மனுக்கள் போடப்பட்டுள்ளது. இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சமீபத்தில்(டிச.14) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.