சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு பேசிக்கொள்ளும் அந்த இரு தலைவர்களும், காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்து விவாதித்து கொண்டனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காண, பாலத்தீன அரசை நிறுவுவது குறித்து பேசிய அதிபர் பைடன், அப்படிப்பட்ட ஒரு தீர்வை சாத்தியப்படுத்துவது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் முடியாதது அல்ல என்று கூறினார். மேலும், இராணுவம் இல்லாத ஒரு அரசாங்கத்தை பாலஸ்தீனத்தில் நிறுவலாம் என்றும் அதிபர் பைடன் ஆலோசனை கூறி இருக்கிறார்.
இதுவரை 24,000+ பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாததால் பாலஸ்தீன அரசை நிறுவ முடியாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வியாழக்கிழமை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலின் "தற்காப்பு உரிமையை" பாதுக்கப்பதாக கூறி, பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. எனினும், பொதுமக்களை படுகொலை செய்வதை குறைக்கவும் மனிதாபிமான உதவியை அனுமதிக்கவும் இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றது. அதனை தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் வாழும் காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 24,000+ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.