அதிபர் தேர்தலில் இருந்து விலக ஒப்புக்கொண்டாரா ஜோ பைடன்? அடுத்த வேட்பாளர் யார், எப்படி தேர்வு செய்யப்படுவார்?
செய்தி முன்னோட்டம்
டைம்ஸ் நவ் வெளியுள்ள ஒரு அறிக்கையின் படி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக ஜோ பைடன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
தொடர் உடல்நல பிரச்சனைகள், பொதுமக்களிடேயே குறைந்த அபிமானம் மற்றும் வயது (பைடேனின் வயது 81) காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் அமெரிக்கா ஊடகமான நியூஸ்மேக்ஸின் ஹல்பெரின் கூற்றுப்படி, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வாரிசாக நிறுத்த பைடன் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.
மேலும் சில ஆதரங்கள்படி, இந்த வார இறுதியில் பைடன் தனது முடிவை அறிவிக்கலாம் என்று கூறுகின்றன.
ஜோ பைடன்
மருத்துவர்களின் பரிந்துரை பொறுத்தே போட்டியிலிருந்து விலகுவது குறித்து தீர்மானிப்பேன்: பைடன்
போட்டியிலிருந்து விலகுமாறு கட்சியினரின் வலியுறுத்தல்களை நிராகரித்த ஜனாதிபதி பைடன், தனக்கு சில "மருத்துவ நிலை" இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் சொன்னால் மட்டுமே விலகுவது குறித்து பரிசீலிப்பதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்கா ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 2024 தேர்தல் பிரச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "எனக்கு ஏதேனும் மருத்துவ நிலை இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் வந்து உங்களுக்கு இந்த பிரச்சனை அல்லது அந்த பிரச்சனை இருப்பதாக சொன்னால் மட்டுமே." என்றார்.
தற்போது பைடன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரது தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெலவரில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமை படுத்தப்பட்டுளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர்
அடுத்த வேட்பாளர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
பைடன் இந்த தேர்தலில் விலகுவதாக அறிவித்தால், ஜனநாயக கட்சியின் பொதுகூட்டம் நடத்தப்படும்.
அதில், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, 3,900 அடிப்படை கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
அதில் முடிவு எட்டப்படாத நிலையில், 700 சூப்பர் டெலிகேட்ஸ் வாக்களிப்பார்கள்.
இறுதி முடிவு எட்டும்வரை, இந்த வாக்கு பதிவுகள் தொடர்ந்து நடைபெறும். பொதுக்கட்சி கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவி காலம் முடியும் முன்னரே அதிபர் பைடன் பதவி விலக நேர்ந்தால், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவரது பொறுப்புகளை ஏற்பார்.
எனினும் 2024 ஜனாதிபதி தேர்தலில் அவர் நேரடியாக நிற்க முடியாது.
அவரும் மேற்கூறிய தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் வேட்பாளர்கள்
ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகினால், அந்த பதவிக்கு வேறு யார் போட்டியிடக்கூடும்?
பைடன் இடத்தில், 2024 அதிபர் தேர்தலுக்கு போட்டியிட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தவிர 11 வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கேவின் நியூசோம்- இவர் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக உள்ளார். இவருக்கு மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது.
அண்டி பேஷர்- கென்டகி மாகாணத்தின் தலைவர்.
எலிசபெத் வாரேன்- இவர் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் செனட் சபை உறுப்பினர். அரசியல் களத்தில் இவர் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இது போல, புளோரிடா, நியூ மெக்ஸிகோ உள்ளிட்ட பல மாகாணங்களை சேர்ந்த தலைவர்கள் அதிபர் தேர்தலுக்கு நிறுத்தப்படக்கூடும்.
இவர்களில் ஜனநாயக கட்சியின் வாக்குகள் யாருக்கு அதிகமாக உள்ளதோ, அவரே டொனால்ட் டிரம்ப்-ஐ எதிர்த்து போட்டியிடுவார்.