புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த சிறுது நேரத்தில், பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு திடீரென்று உடல் நல கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் தற்போது மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிற்கும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆபத்தான நிலையில் இருப்பதாக, பெலாரஸ் 2020 அதிபர் வேட்பாளர் வலேரி செப்கலோ டெலிகிராம் இடுகையில் கூறியுள்ளார். "எங்களிடம் உள்ள தகவலின்படி, புதினுடனான சந்திப்புக்குப் பிறகு, லுகாஷென்கோ அவசரமாக மாஸ்கோவின் மத்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு தான் அவர் தற்போது தங்கியுள்ளார்." என்று வலேரி செப்கலோ கூறியுள்ளார்.
நான் இறக்கப் போவதில்லை தோழர்களே: அலெக்சாண்டர் லுகாஷென்கோ
மேலும், அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு ரஷ்யா விஷம் வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மே 9 அன்று மாஸ்கோவில் நடந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் லுகாஷென்கோ கலந்து கொண்டதில் இருந்து லுகாஷென்கோவின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இந்த வதந்திகளை எல்லாம் மறுத்த லுகாஷென்கோ "நான் இறக்கப் போவதில்லை தோழர்களே" என்று கூறி இருந்தார். கடந்த வாரம், பெலாரஸில் அணுசக்தி ஏவுகணைகளை நிலைநிறுத்துவதை முறைப்படுத்த ரஷ்யா லுகாஷென்கோ அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ரஷ்யா மற்றும் பெலாரஸின் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்ய அணு ஆயுதங்களை பெலாரஷ்ய பிரதேசத்தில் சேமிப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டதாக பெலாரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.