இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியில் இன்று(மார் 22) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்தில் பாதுகாப்பு குறைக்கப்பட்ட சில மணி நேரத்தில், இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய லண்டனில் உள்ள இந்தியா பிளேஸ் என்று அழைக்கப்படும் கட்டிடத்திற்கு வெளியே போலீஸ் அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் மற்றும் ரோந்து அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜன்னல்களுக்கு இடையில் ஒரு மாபெரும் இந்தியக் கொடி கட்டப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து தூதரகத்தில் பாதுகாப்பு குறைப்பு
ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். இந்த போராட்டம் தொடங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு தான் லண்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது இந்திய தரப்பினருக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே, காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை இந்தியா, பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால், கோபமடைந்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று மதியம் அகற்றியது. இதனையடுத்து, இன்று மாலை இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.