Page Loader
பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா
டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது

பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா

எழுதியவர் Sindhuja SM
Mar 22, 2023
02:24 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த வார இறுதியில் லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் தூதுவரின் இல்லத்திற்கான பாதுகாப்பை இந்தியா குறைக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும், ராஜாஜி மார்க்கில் உள்ள பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸின் இல்லத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் இன்று(மார் 22) பிற்பகல் அகற்றப்பட்டன. இருப்பினும், பிரிட்டிஷ் தூதரகத்திற்கு பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் குறைக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறைப் போராட்டத்தின் போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

இந்தியா

லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நடந்த பெரும் வன்முறை போராட்டம்

இந்த போராட்டம் தொடங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு தான் லண்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது இந்திய தரப்பினருக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே, காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை இந்தியா பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால், இந்தியா மிக கோபமாக பதிலளித்தது. பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் கிறிஸ்டினா ஸ்காட் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். காலிஸ்தான் ஆதரவாளர்களால் இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்ட போது, பிரிட்டிஷ் பாதுகாப்பு முற்றிலும் இல்லாதததற்கான காரணத்தை இந்தியா கேட்டிருந்தது. மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டது.