அரிசி விலை விண்ணைத் தொட்டதால் ரொட்டிக்கு மாறிய வங்கதேச மக்கள்! 4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய கோதுமை இறக்குமதி
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்தில் மக்களின் முதன்மை உணவான அரிசியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. மே மாத அறுவடைக்குப் பிறகும் அரிசி விலை கிலோவுக்கு 3 முதல் 5 டாக்கா வரை உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு கோதுமை ரொட்டிக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் கோதுமை மாவுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோதுமை மாவின் விலை சுமார் 17 சதவீதம் வரை உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோதுமை தடை நீக்கம்
கருங்கடல் போர் சூழலும் இந்திய கோதுமையின் தடையை நீக்கிய பின்னணியும்
வங்கதேசத்திற்குத் தேவையான கோதுமையில் பெரும்பகுதி ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கருங்கடல் பகுதியில் போர் தீவிரம் அடைந்து கப்பல்கள் தாக்கப்பட்டதால், உக்ரைனின் கோதுமை ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து கோதுமை வாங்க அதிக செலவான நிலையில், இந்தியாவில் 2025-26 காலக்கட்டத்தில் 120.65 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவிலான கோதுமை விளைச்சல் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆண்டுகால கோதுமை ஏற்றுமதி தடையை இந்திய அரசு விலக்கிக் கொண்டது.
4 ஆண்டுகள்
4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி
இந்திய அரசு ஏற்றுமதித் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிலிருந்து கோதுமை வாங்க வங்கதேசம் ஒப்பந்தம் செய்துள்ளது.
வங்கதேச வர்த்தகர்கள் ஒரு டன் கோதுமையை 306 முதல் 326 டாலர் விலையில் சுமார் 2 லட்சம் டன்களுக்கும் அதிகமான இந்தியக் கோதுமையை ரயில் போக்குவரத்து மூலம் இறக்குமதி செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
புவியியல் ரீதியாக இந்தியா அருகில் இருப்பதால், போக்குவரத்து செலவும் மற்றும் நேரமும் பெருமளவில் மிச்சமாகிறது என்று வங்கதேசத் தொழில் அதிபர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி அதிகரிப்பு
இலங்கை மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும் அதிகரிக்கும் இந்தியக் கோதுமை ஏற்றுமதி
வங்கதேசம் மட்டுமின்றி, இலங்கையும் சமீபத்தில் இந்தியாவிலிருந்து சுமார் 60,000 டன் கோதுமையை டன் ஒன்றுக்கு 325 டாலர் விலையில் வாங்கியுள்ளது.
அமெரிக்க வேளாண்மைத் துறையின் கணிப்பின்படி, கருங்கடல் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் இந்தியாவில் உள்ள அதிகப்படியான கையிருப்பு காரணமாக, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2 மில்லியன் டன்களாக நான்கு மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்தியக் கோதுமையை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.