Loading...
ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வங்கதேசம் மறுப்பு: நாடு கடத்த தீவிரம்
ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வங்கதேசம் மறுப்பு

ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வங்கதேசம் மறுப்பு: நாடு கடத்த தீவிரம்

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தாயகம் திரும்புவதற்காகப் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை (NID) கோரி விடுத்த விண்ணப்பத்தை வங்கதேச அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஹசீனாவின் இந்த நடவடிக்கையை வெறும் "நாடகம்" என்று விமர்சித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹூமாயூன் கபீர், "வங்கதேச அரசு பயங்கரவாதிகளுக்கும் தப்பியோடிய குற்றவாளிகளுக்கும் ஒருபோதும் பாஸ்போர்ட் வழங்காது" என்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடைமுறை

ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்

ஹசீனாவுக்கு தாயகம் திரும்ப உண்மையிலேயே விருப்பமிருந்தால், அதற்கான முறையான சட்ட நடைமுறைகள் உள்ளதாகவும், இந்திய அரசிடம் தம்மை ஒப்படைக்குமாறு கூறி வங்கதேச நீதிமன்றத்தில் சரணடைந்து அவர் தனது தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கபீர் குறிப்பிட்டார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் போது ஆட்சியை இழந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வங்கதேச சிறப்புத் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் வழக்கறிஞர்கள் கடிதம்

நாடுகடத்தும் முயற்சிகளில் தீவிர நிலைப்பாடு

இதற்கிடையே, லண்டனை சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் வழக்கறிஞர்கள் மூலம் தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு ஹசீனா தரப்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இந்த விண்ணப்பத்தில் ஹசீனாவின் நேரடி ஒப்புதல் சான்றுகள் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹசீனாவின் மனு குறித்து சட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வரும் சூழலில், தப்பியோடிய குற்றவாளியான ஹசீனாவை தூதரக மற்றும் சட்ட வழிகளில் நாடு கடத்தி வந்து தண்டனையை நிறைவேற்றுவதில் வங்கதேச அரசு உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT