பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. 79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர், உடல்நலக்குறைவால் அதிகாலை 1:40 மணியளவில் Evercare மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார் என்று BNP ஊடக செல் உறுப்பினர் சைருல் கபீர் கான் கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. அவரது மருத்துவர், பேராசிரியர் ஏஇசட்எம் ஜாஹித் ஹொசைன், மருத்துவ வாரியம் பல பரிசோதனைகளை பரிந்துரைத்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் ஒரு தனியார் அறையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பல உடல்நல பிரச்சனைகளால் போராடி வரும் கலீதா ஜியா
ஆகஸ்ட் 21 அன்று, ஜியா அதே மருத்துவமனையில் 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். பிஎன்பி தலைவர் நீண்டகாலமாக கல்லீரல் ஈரல் அழற்சி, மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறார். ஜூன் 23 அன்று ஒரு பேஸ்மேக்கர் அவருக்கு பொறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2021 இல் அவருக்கு கல்லீரல் ஈரல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து அவரது மருத்துவர்கள் அவரை வெளிநாடுகளுக்கு அனுப்ப பரிந்துரைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் பிரதமர், ஆகஸ்ட் 6ஆம் தேதி வங்கதேச அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.