Page Loader
இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா
பழங்குடியின மக்களை கௌரவிக்கும் புதிய பண நோட்டுகள் வெளியிடப்பட இருக்கிறது.

இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா

எழுதியவர் Sindhuja SM
Feb 02, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டிஷ் மகாராணியின் படம் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று(பிப் 2) அறிவித்துள்ளது. மூன்றாம் சார்லஸ் அரசரின் படமும் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இல்லை என்பதால், இனி பிரிட்டிஷ் அரசாட்சியின் அடிப்படையிலான படங்கள் எதுவுமே ஆஸ்திரேலிய நோட்டுகளில் இருக்காது. ஆஸ்திரேலியா ஒரு தனிப்பட்ட நாடாக இருந்தாலும், அது பிரிட்டிஷ் அரசாட்சிக்கு கீழ்வரும் ஒரு சமஸ்தானமாகத் தான் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் "உண்மையான" அரச தலைவராகக் கருதப்பட்ட இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்தவுடன், முடியாட்சியாக இருக்கும் ஆஸ்திரேலியாவில் குடியரசு குறித்த கருத்துக்கள் பரவலாக விவாதிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஆஸ்திரேலிய மக்கள் பிரிட்டிஷ் அரசாட்சிக்கு சாதகமாக வாக்களித்து பிரிட்டிஷ் மகாராணியை அரச தலைவராகத் தக்கவைத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலியா

குடியரசு ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் பிரதமரின் கட்சி

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் பழங்குடியின மக்களை ஆவணத்தில் சேர்ப்பதற்கான அரசியலமைப்பு வாக்கெடுப்பை நடத்த அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பண நோட்டில் இந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின மக்களை கௌரவிக்க கூடிய "முதல் ஆஸ்திரேலியர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மதிக்கும்" ஒரு புதிய வடிவமைப்பைப் பண நோட்டிற்கு வழங்கவுள்ளதாக ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய பண நோட்டை வடிவமைத்து அச்சிடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றும், தற்போதைய $5 நோட்டு, புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக மதிப்பை இழக்காது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த நடவடிக்கை பிரதமர் அந்தோனி அல்பனீஸின் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டது என்பதால், அவரது தொழிற்கட்சி, குடியரசு ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதாக பேசப்படுகிறது.