போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சி எம்பியான பிரிட்டானி லாகா, மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள யெப்பூன் நகரில் கடந்த வார இறுதியில் தனக்கு போதைப்பொருள் கொடுத்து யாரோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதனையடுத்து, காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், அதன்பின் ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். "மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனைகள் என் உடலில் நான் உட்கொள்ளாத மருந்துகள் இருப்பதை உறுதிப்படுத்தியது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதே இரவில் யெப்பூனில் வைத்து போதைப்பொருளுக்கு உட்படுத்தப்பட்ட மற்ற பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு தன்னை தொடர்பு கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகாரை விசாரித்து வருகிறது காவல்துறை
"அதே விஷயத்தை அனுபவித்த பல பெண்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர்... இது சரியில்லை. போதைப்பொருள் அல்லது வன்கொடுமைக்கு ஆளாகாமல் நம்மால் இந்த சமூகத்தில் வாழ முடிய வேண்டும்" என்று லாகா கூறியுள்ளார். லாகா தனக்கு "உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் குணமடைய நேரம் தேவை" என்று கூறி தனிமை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். யெப்பூனில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான பாலியல் வன்கொடுமை புகாரை விசாரித்து வருவதாக குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அந்த பகுதியில் இது போன்ற வேறு எந்த புகாரும் செய்யப்படவில்லை. இதற்கிடையில், காவல்துறையினர் தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.