உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா
உக்ரைன் போரை நிறுத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாக இன்று(பிப் 11) கூறியுள்ள அமெரிக்கா, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. "புதினுக்கு போரை நிறுத்த இன்னும் நேர அவகாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி எந்த முயற்சியை மேற்கொள்ள விரும்புகிறாரோ அதை நான் ஆதரிப்பேன். உக்ரைனில் உள்ள பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்" என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் புதினுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்ததால் அமெரிக்கா இதை கூறி இருக்கிறது.
ரஷ்யா- உக்ரைனின் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி
உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து ஒரு வருடத்தை குறிக்கும் விதமாக ஜோ பைடன் போலந்துக்கு செல்ல போவதாக அறிவித்த நிலையில், ரஷ்யா ஒரு பெரிய புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் நேற்று(பிப் 10) கூறியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவில் புதினுடன் சந்திப்பு நடத்திய சில நாட்களுக்குப் பிறகு வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. "இன்றைய யுகம் போருக்கானதல்ல. நான் இதை பற்றி ஏற்கனவே உங்களிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறேன். இன்று நாம் எப்படி அமைதிப் பாதையில் முன்னேறுவது என்பது பற்றி பேச வாய்ப்பு கிடைத்துள்ளது." என்று கடந்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி கூறி இருந்தார்.