பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பொருளாதார நிலை படுமோசமாக உள்ள பாகிஸ்தானில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதைக் கண்காணித்து நேர்மையாக நடத்துவதற்காக தற்காலிக பிரதமரை தேர்வு செய்ய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. இதையொட்டி தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் ஆகியோர் நடத்திய இரண்டு சுற்று ஆலோசனைக்குப் பிறகு அன்வார்-உல்-ஹக் காக்கரின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் ஷெரீப் தேசிய சட்டமன்றத்தை கலைக்க ஆகஸ்ட் 9இல் பரிந்துரைத்தார். அந்நாட்டு சட்டப்படி தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த 90 நாட்களில் கட்டாயமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும்.
யார் இந்த அன்வார்-உல்-ஹக் காக்கர்
செனட்டர் காக்கர், இந்த ஆண்டு இறுதியில் புதிய தேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசாங்கத்தை வழிநடத்துவார். அன்வர்-உல்-ஹக் காக்கர் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி அல்ல என்றாலும், அவருக்கு தொடர்புடைய பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்த காக்கர், 2018 முதல் பாகிஸ்தான் செனட்டில் சுயேட்சை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் செனட்டில் சுயேட்சையாக செயல்பட்டாலும், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த ராணுவத்திற்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவராக காக்கர் இருந்தார். மேலும் வணிக ஆலோசனைக் குழு, நிதி மற்றும் வருவாய், வெளியுறவு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.