பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், வைரலான டிக்டாக் சேலஞ்சை முயற்சித்ததால், உயிரிழந்துள்ளார். சமூக வலைத்தளமான டிக்டாகில் 'பெனட்ரில் சேலஞ்சின்' ஒரு பகுதியாக பெனட்ரில் என்ற மருந்தின் 12 முதல் 14 மாத்திரைகளை உட்கொண்டதால் அந்த சிறுவனன் உயிரிழந்துள்ளான். அதிக அளவிலான டிஃபென்ஹைட்ரமைனை உட்கொள்ள இந்த 'பெனட்ரில் சேலஞ்சு' டிக்டாக் பயனர்களை ஊக்குவிக்கறது. டிஃபென்ஹைட்ரமைன் என்ற போதை பொருள் பெனட்ரில் மற்றும் பிற OTC மருந்துகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த சேலஞ்சில் கலந்து கொள்கிறவர்கள் ஒரு நேரத்தில் 12-14 பெனட்ரில் மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். அதன் பின், இதனால் ஏற்படும் மாயத்தோற்றங்களை(hallucinations) பற்றி அவர்கள் டிக்டாகில் பதிவு செய்கின்றனர்.
இதே சேலஞ்சால் 2020ஆம் ஆண்டில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்
2020 ஆம் ஆண்டில் இந்த ஸ்டண்ட் மிகவும் பிரபலமடைந்தது. டீனேஜர்கள் இந்த சேலஞ்சில் அதிகம் கலந்துகொண்டனர் என்று நியூயார்க்-போஸ்ட் தெரிவித்துள்ளது. பெனட்ரிலில் டிஃபென்ஹைட்ரமைன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது காய்ச்சல், சுவாச ஒவ்வாமை அல்லது ஜலதோஷத்தால் ஏற்படும் அறிகுறிகளை தற்காலிகமாக நீக்குகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக டிஃபென்ஹைட்ரமைனை எடுத்துக்கொண்டால், இதய பிரச்சனைகள், வலிப்பு, கோமா அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது. அதிகப்படியான டிஃபென்ஹைட்ரமைன் மலச்சிக்கல், தொண்டை வறட்சி,நீரிழப்பு, அயர்வு, குமட்டல், நடுக்கம், மங்கலான பார்வை, விரைவான இதயத் துடிப்பு, வலிப்பு மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதே சேலஞ்சால் 2020ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஓக்லஹோமாவை சேர்ந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.