நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. சம்பத்தின் போது கிட்டத்தட்ட 300 பயணிகள் விமானத்தில் (AI106) இருந்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன. நியூ ஜெர்சியின் நெவார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதால் அவசரமாக ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தின் எஞ்சின் ஒன்றில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதாக சிவில் ஏவியேஷன் மூத்த இயக்குனரக(டிஜிசிஏ) அதிகாரி PTIயிடம் தெரிவித்தார். "எண்ணெய் கசிவு காரணமாக என்ஜின் நிறுத்தப்பட்டவுடன், விமானம் பாதுகாப்பாக ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டது," என்று அவர் கூறியுள்ளார். அவசரமாக தரையிறக்கப்பட்ட பிறகு, நிபுணர்கள் குழு விமானத்தை ஆய்வு செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பிரச்சனையில் சிக்கி வரும் ஏர் இந்தியா விமானங்கள்
இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக, நவம்பர் மாதம் ஏர்-இந்தியா விமானத்தில் குடிபோதையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் வயதான சகபயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 23 அன்று திருவனந்தபுரம்-மஸ்கட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட 45 நிமிடங்களில் தரையிறங்கிய சம்பவம் நடந்த சில வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மேலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.