Loading...
AI மூலம் போலி அடையாளங்கள் உருவாக்கி கனடா வங்கிகளை ஏமாற்றிய இந்தியா - பாகிஸ்தான் மோசடி கும்பல் கைது
எல்லை தாண்டிய சைபர் குற்றக் கும்பலை பாகிஸ்தான் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு முகமை கண்டறிந்துள்ளது.

AI மூலம் போலி அடையாளங்கள் உருவாக்கி கனடா வங்கிகளை ஏமாற்றிய இந்தியா - பாகிஸ்தான் மோசடி கும்பல் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2026
06:25 pm

செய்தி முன்னோட்டம்

AI பயன்படுத்தி இல்லாத நபர்களின் பெயரில் போலி அடையாளங்களை உருவாக்கி, கனடா வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த எல்லை தாண்டிய சைபர் குற்றக் கும்பலை பாகிஸ்தான் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு முகமை (NCCIA) கண்டறிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக லாகூரில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சர்வதேச இணையக் குற்றக் கும்பலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 நபர்களும், கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 நபர்களும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர்.

மோசடி

மோசடி கும்பல் செயல்பட்ட விதம்

கனடாவில் இருக்கும் இந்தியர்கள், நிஜ நபர்களின் பிறந்த தேதி மற்றும் அடையாள எண்களுடன் AI மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளைத் தயாரித்துள்ளனர்.

இந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானில் உள்ளவர்கள் டால்பின் ஆண்டி என்ற சிறப்பு ஆன்டி-டிடெக்ட் பிரவுசர் மூலம் தங்களது சாதனத்தின் ஐபி முகவரியை மறைத்து, கனடா வங்கிகளில் ஆன்லைனில் கணக்குகளைத் திறந்துள்ளனர்.

கணக்குகள் தொடங்கப்பட்டதும், அதற்கான கிரெடிட் கார்டுகள் கனடாவில் உள்ள கூட்டாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ளவர்கள் அந்த கார்டுகளின் கிரெடிட் அளவை முழுமையாக பயன்படுத்திவிட்டு கார்டுகளை வீசி எறிந்து தலைமறைவாகியுள்ளனர்.

விவரங்கள்

மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

கடந்த அக்டோபர் 19 அன்று லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்த NCCIA கூடுதல் இயக்குநர் ஆதிஃப் அமீர், இந்தக் கும்பலை நீண்டநாட்களாக கண்காணித்து வந்ததாகவும், சோதனையில் 4 லேப்டாப்கள், 4 மொபைல் போன்கள் மற்றும் போலி கனடா பாஸ்போர்ட்டுகளின் அச்சுப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடாவில் உள்ள 4 இந்தியர்கள் மீது அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட வங்கிகளின் மொத்த நிதி இழப்பு குறித்தும் பாகிஸ்தான் காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை.

வங்கிகளின் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைகளை AI தொழில்நுட்பம் மூலம் மிக எளிதாக ஏமாற்ற முடியும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ADVERTISEMENT