ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் நேற்று இரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். ஈரானிய-அஜர்பைஜான் எல்லையில் உள்ள கிஸ் கலாசி அணை திறப்பு விழாவைத் தொடர்ந்து ஈரானிய நகரமான தப்ரிஸுக்கு செல்லும் வழியில் உயர் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் ஒரு மலையைக் கடக்கும்போது கீழே விழுந்தது. ஈரானிய அரசியலமைப்பின் கீழ், ஒரு பதவியில் இருக்கும் அதிபர் மரணம் அடைந்தால், முதலில் துணை அதிபர், இடைக்கால பதவியில் அதிபராக பதவியேற்பார். தற்போது துணை அதிபராக இருப்பவர் முகமது மொக்பர்(69) ஆவார். எனவே அவர் விரைவில் அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்த ஏற்பாடு
உச்ச தலைவர் கமேனியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட அனுபவமிக்க அரசியல் பிரமுகரான மொக்பர், ஈரான் தலைவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டவர் ஆவார். அவர் முன்பு செட்டாட் என்ற சக்திவாய்ந்த அரசுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். மேலும் அவர் சர்வதேச சட்டம் மற்றும் நிர்வாகத்தில் மேம்பட்ட பட்டம் பெற்றவர் ஆவார். மொக்பர், பார்லிமென்ட் சபாநாயகர் முகமது கலிபாஃப் மற்றும் நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே ஆகியோர் அடங்கிய ஒரு கவுன்சில், 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை ஏற்பாடு செய்யும் பணியில் உள்ளது. இந்த மாற்றத்தை உச்ச தலைவர் கமேனி அங்கீகரிக்க வேண்டும். அவர் ஏற்கனவே அரசு விவகாரங்கள் இடையூறு இல்லாமல் தொடரும் என்று தேசத்திற்கு உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.