மருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஓட்டிச் செல்லும் கோல்ஃப் வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இன்று மாஸ்கோவிற்கு அருகிலுள்ள நோவோ-ஓகாரியோவோவில் உள்ள புதினின் இல்லத்திற்கு பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் அழைத்து சென்றார். அரசாங்க ரீதியாக அல்லாமல் நட்பு ரீதியாக பிரதமர் மோடி, அதிபர் புதினின் வீட்டிற்கு சென்றுள்ளார். மருத்துவமனை, விளையாட்டு வளாகம், குதிரை லாயம் போன்ற பல அம்சங்கள் நிறைந்தது அதிபர் புதினின் வீடாகும். எனவே, தனது வீட்டை நடந்து சென்று சுற்றி காட்ட முடியாது என்பதற்காக பிரதமர் மோடியை ஒரு கோல்ஃப் வண்டியில் வைத்து அவர் அழைத்து சென்றார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
அதிபர் புதினின் நோவோ-ஓகாரியோவோ வீட்டை பற்றி தெரியுமா?
நோவோ-ஓகாரியோவோ என்பது மாஸ்கோ ஒப்லாஸ்ட்டின் ஒடிண்ட்சோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டமாகும். 2000 ஆம் ஆண்டு முதல், இது புதினின் அதிகாரப்பூர்வ இல்லமாக இயங்கி வருகிறது. அதற்கு முன், இந்த ஸ்விஷ் சொத்து சோவியத் காலத்தில் அரசு வசிப்பிடமாகவும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான விருந்தினர் மாளிகையாகவும் செயல்பட்டது. பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டரின் சகோதரரான கிராண்ட் டியூக் செர்ஜி அலெக்ஸாண்ட்ரோவிச்சின் உத்தரவின் பேரில் இந்த எஸ்டேட்டின் பிரதான வீடு 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர், இது விருந்தினர்கள் தங்குவதற்கான மாளிகையாகவும், பல்வேறு அரசாங்க குழுக்களுக்கான பணியிடமாகவும் செயல்பட்டது. அந்த தோட்டத்தில் ஒரு பிரதான வீடு, விளையாட்டு அரங்கம், குதிரை லாயம், மருத்துவமனை, ஹெலிகாப்டர் முனையம் மற்றும் தனிப்பட்ட ரயில் நிலையங்கள் ஆகிவை உள்ளன.