பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு
அரச குடும்பத்தின் மானியத்தை 45% அளவிற்கு உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி அரச குடும்பத்தின் மானியம் தற்போதைய ₹908 கோடியிலிருந்து ₹1,320 கோடியாக அதிகரிக்க உள்ளது. இந்த அதிகரிப்பு 2025 முதல் அமலுக்கு வரும் நிலையில், பிரிட்டன் குடிமக்களின் வரிப்பணத்தில் அதிக தொகை, அரச குடும்பத்திற்காக செலவிடப்படும். முன்னதாக, வியாழன் (ஜூலை 20) அன்று பிரிட்டன் அரசின் கருவூலம் அரச நிதி பற்றிய மதிப்பாய்வை வெளியிட்டது. இது இறையாண்மை மானியம் என அழைக்கப்படும் அரச குடும்பத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டம், கிரவுன் எஸ்டேட் எனப்படும் தேசிய சொத்து இலாகாவின் இலாபத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
மன்னராட்சிக்கு எதிரானவர்கள் அரச குடும்பம் மீது விமர்சனம்
கருவூலத்தால் வெளியிடப்பட்ட ராயல் நிதியத்தின் மதிப்பாய்வு, மன்னர் சார்லஸ் கிரவுன் எஸ்டேட் நிதியை, பொது மக்களின் சேவைகளுக்கு அனுப்ப, தனது ஊதியத்தை குறைப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், அரச குடும்பம் இதற்கு மாறாக 2025இல் இருந்து, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெற உள்ளது, மன்னராட்சியை எதிர்ப்பவர்களிடம் அதிருப்தியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, கருவூலத்தின் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டினா க்ராப்ட்ரீ, அரச குடும்ப மானியம் 2020 முதல் மாறாமல் உள்ளதாகவும், தற்போதைய இந்த தற்காலிக அதிகரிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிப்புக்கான மீதமுள்ள செலவுகளை ஈடுசெய்வதற்குதான் என தெரிவித்துள்ளார். மானியத்தை 2026 இல் மீண்டும் மதிப்பாய்வு செய்து, 2027 இல் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக க்ராப்ட்ரீ தெரிவித்தார்.