காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஜபாலியா அகதிகள் முகாமின் அல்-ஷுஹாடா பகுதியில் அமைந்திருந்த இந்தக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அது தரைமட்டமாக்கியது. மேலும், அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தது என்று செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் 117 குழந்தைகள் உட்பட 266 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி , பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,400 இஸ்ரேலியர்களி கொன்றனர். அதை தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
ஹெஸ்புல்லா அமைப்புக்கு எச்சரிக்கைவிடுத்தார் இஸ்ரேலிய பிரதமர்
இரண்டு வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் இதுவரை 4,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி, விரிவடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவ லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் திங்கள்கிழமை அதிகாலை இரண்டு ஹெஸ்புல்லா செல்களைத் தாக்கியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லாஹ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஹெஸ்பொல்லா இந்த போரில் நுழைந்தால், அது "இரண்டாம் லெபனான் போருக்கு" வழிவகுக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.