22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்
22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அந்த கப்பலுக்கு உதவ இந்திய கடற்படை தனது படைகளை அனுப்பியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி இரவு அந்த எண்ணெய் கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்தது என்றும், அதனையடுத்து ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஏடன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டது என்றும் கடற்படை தெரிவித்துள்ளது. "வணிகக் கப்பலில் எரியும் தீயை அணைக்க என்பிசிடி குழுவினர் முயற்சித்து வருகின்றன. MV கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு உதவ ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் அனுப்பப்பட்டுள்ளது" என்று கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் போர்க்கப்பல் மீதும் தாக்குதல்
ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளால் தாக்கப்பட்ட கப்பலில் 22 இந்தியர்களும் 1 பங்களாதேஷ் பணியாளர்களும் இருப்பதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. டிரஃபிகுரா என்ற வர்த்தக நிறுவனத்தின் சார்பாக அந்த எரிபொருள் டேங்கர் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அது செங்கடலை கடக்கும்போது ஏவுகணையால் தாக்கப்பட்டது என்றும் கடற்படை கூறியுள்ளது. அது போக, அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்னியும் நேற்று ஹூதி போராளிகளால் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் பல தசாப்தங்களுக்கு பிறகு, மேற்கத்திய படைகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே கடலில் நடந்த மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.