17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் வைத்து 25 பணியாளர்கள் கொண்ட ஒரு கொள்கலன் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் இன்று கைப்பற்றினர். அந்த கப்பலில் இருந்த 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. MCS Aries என்ற அந்த கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஹெலிபோர்ன் நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. மேலும் அது இப்போது ஈரானின் பிராந்திய கடற்பகுதியை நோக்கி செல்கிறது என்று ஈரான் அரசுக்கு சொந்தமான IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கைப்பற்றியுள்ளது ஈரான்
ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் தூதரகப் பிரிவு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேலின் மீது விரைவில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஈரான் தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு ஜெனரல்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே, இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. அந்த கப்பலில் இருந்த 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த கப்பல் "வளைகுடாவில் உள்ள சியோனிச ஆட்சியுடன்(இஸ்ரேல்) தொடர்புடையது" என்று ஈரான் கூறியுள்ளது.