மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
செய்தி முன்னோட்டம்
மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான பங்களாதேஷிற்கு செல்வதற்காக எல்லையைக் கடக்க காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இரண்டையும் பிரிக்கும் நாஃப் நதியில் தப்பியோடிய ரோஹிங்கியாக்களை ஏற்றிச் சென்ற படகும் மூழ்கியது.
இந்த சமபவத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவத்திற்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இருதரப்பும் எதிராணியினரை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இனப்படுகொலை
மியான்மரில் இனப்படுகொலையால் வெளியேறும் ரோஹிங்கியாக்கள்
மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம் இனக்குழு மீது இனப்படுகொலை நோக்கத்துடன் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை காரணமாக, 2017ஆம் ஆண்டில் மட்டும் 7,30,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐநா தெரிவித்துள்ளது.
2021இல், இராணுவ ஆட்சி மியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கியை பதவி நீக்கம் செய்தது. அன்று முதல் நாடு கொந்தளிப்பில் உள்ளது.
இதைத் தொடர்ந்து பல ஆயுதமேந்தி போராடும் குழுக்களில் ஒன்றான அரக்கான் இராணுவம், முஸ்லீம்களின் அதிக மக்கள்தொகை கொண்ட வடக்கில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதால், ரோஹிங்கியாக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.