ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல்
ஐபிஎல் 2023 சீசனின் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை படைத்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 149/8 என்று கட்டுப்படுத்தியதில், சாஹல் எடுத்த 4 விக்கெட்டுகளை முக்கிய பங்கு உண்டு. மேலும் இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். இந்த போட்டி தொடங்கும் முன் சாஹல் 183 விக்கெட்டுகளுடன் டுவைன் பிராவோவுக்கு சமநிலையில் இருந்தார். இந்நிலையில், இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் புள்ளிவிபரங்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாஹல் இப்போது ஐபிஎல்லில் ஆறு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று 4 விக்கெட்டுகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022 இல் இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் எடுத்த ஐந்து விக்கெட்டும் அடங்கும். 2022 சீசனில் பர்ப்பிள் தொப்பியை வென்ற நிலையில், நடப்பு சீசனிலும் 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் தொப்பிக்கான ரேஸில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சாஹல், தனது இரண்டாவது சீசனிலேயே 48 விக்கெட்டுகளை எடுத்து நான்காவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.