உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை; முதலிடத்தை வலுப்படுத்தியது இந்தியா; மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை
இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) வங்கதேசத்திற்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் 2 தோல்விகளைக் கொண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் இந்தியா தற்போது 71.67 ரேட்டிங் சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிடம் தோற்ற வங்கதேச அணி கீழிறங்கி ஆறாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 39.29 ரேட்டிங் புள்ளிகளைக் கொண்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இதர நாடுகளின் இடங்கள்
திங்கட்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 8 போட்டிகளில் தலா 4 வெற்றி, தோல்விகளுடன் 50 ரேட்டிங் சதவீதத்தைக் கொண்டுள்ளது. தோல்வியடைந்த நியூசிலாந்து அணி 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதற்கிடையே, 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா ஏழாவது இடத்திலும், பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.