'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இல்லாத நிலையில், இஷான் கிஷான் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கிறார். எனினும், இதில் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் இடம் பெறாதது தனக்கு ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ளார். டாப்-ஆர்டர் சரிவு ஏற்பட்டால், குறிப்பாக வெளிநாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டால், பந்த் இந்தியாவின் சிறந்த பேட்டராக இருந்தார். அவர் டிசம்பரில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் தற்போது மீண்டு வருகிறார்.
மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ரிஷப் பந்திற்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான சூர்யகுமார், ஜூன் மாதம் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியும் என்று ரிக்கி பாண்டிங் நம்புகிறார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஐசிசி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இதை தெரிவித்த ரிக்கி பாண்டிங், அவர் அணியில் இடம் பெறாமல் போனது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். ஆனால் அவர் காத்திருப்பு வீரர்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இதற்கிடையே இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இஷான் கிஷனுக்கு அணியில் இடம் கிடைத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.