டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் நடைபெறும் என தகவல்
மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான மினி ஏலமாக நடத்தப்படும் இதில் ஒவ்வொரு அணி உரிமையாளர்களிடமும் ₹15 கோடி பர்ஸ் இருக்கும். இது கடந்த ஆண்டு 13.5 கோடி ரூபாயாக இருந்தது. இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியா தஹுஹு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டியான்ட்ரா டாட்டிங் ஆகியோர் ஏலத்தில் இடம்பெறும் சில முன்னணி வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். ஆல்-ரவுண்டர் ஸ்னே ராணா, லெகி பூனம் யாதவ் மற்றும் பேட்டர் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியமான இந்திய வீராங்கனைகள் ஆவர்.
மகளிர் ஐபிஎல் மூன்றாவது சீசன்
மகளிர் ஐபிஎல்லில் தொடக்க சீசனின் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெற்றன. இரண்டாவது சீசனில் 22 போட்டிகள் பெங்களூர் மற்றும் டெல்லியில் விளையாடப்பட்டன. இந்நிலையில், தற்போதைய மூன்றாவது சீசனில், பிசிசிஐ புதிய மைதானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், ஆடவர் ஐபிஎல்லைப் போல உள்ளூர் மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மகளிர் ஐபிஎல் சீசன் பிப்ரவரி - மார்ச் 2025 இல் விளையாடப்படும். மும்பை இந்தியன்ஸ் மகளிர் ஐபிஎல்லின் தொடக்க சீசனில் பட்டத்தை வென்றது. அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது சீசனில் பட்டத்தைக் கைப்பற்றியது.