
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்
செய்தி முன்னோட்டம்
நீளம் தாண்டுதலில் தேசிய சாதனையை தக்கவைத்துள்ள தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தடகள உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று போட்டியின் முதல் முயற்சியில் 8.0 மீட்டர் தொலைவுக்கு தாண்டினார்.
அடுத்த இரண்டு முயற்சிகளும் பவுல் ஆனது. இறுதிப்போட்டிக்கு முன்னேற குறைந்தபட்சம் 8.15 மீட்டர் அல்லது டாப் 12 தேர்வு செய்யப்படும் நிலையில், ஜெஸ்வின் ஆல்ட்ரின் 12வது வீரராக இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன் மூலம் முதல் முறையாக நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜெஸ்வின் ஆல்ட்ரின், வியாழக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் பதக்கத்திற்காக போட்டியிட உள்ளார்.
murali sreeshankar out from competition
முரளி ஸ்ரீஷங்கர் தகுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அவருடன் போட்டியில் பங்கேற்ற சக இந்திய வீரரான முரளி ஸ்ரீசங்கர் தனது மூன்று முயற்சிகளில் முறையே 7.74 மீட்டர், 7.66 மீட்டர் மற்றும் 6.70 மீட்டர் தூரத்தை மட்டுமே எட்டினார்.
இதனால் அவர் தகுதிச் சுற்றில் 22வது இடத்தை பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார். ஸ்ரீசங்கர் இந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் ஆல்ட்ரினை விட சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பல சமயங்களில் 8 மீட்டருக்கும் மேல் தூரத்தை எட்டியுள்ளதோடு, கடந்த ஜூலை மாதம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளியும் வென்றார்.
இந்நிலையில், அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சேபிளும் தகுதிச் சுற்றில் தோற்று வெளியேறினார்.