மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா அபார வெற்றி
வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற மஹிந்திரா ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் இந்த போட்டிகள் நடந்தன. ஜெய்ஸ்மின் 60 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் தான்சானியாவின் நியாம்பேகா பீட்ரைஸ் ஆம்ப்ரோஸுக்கு எதிராக விளையாடிய நிலையில், போட்டியின் ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி எளிதாக வெற்றி பெற்றார். இதையடுத்து ஜெய்ஸ்மின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தஜிகிஸ்தானின் சமடோவா மிஜ்கோனாவை எதிர்கொள்கிறார். ஹரியானவை சேர்ந்த இளம் வீராங்கனையான ஜெய்ஸ்மின் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கென்யாவின் முவாங்கி தெரேசியா வீழ்த்திய ஷஷி சோப்ரா
63 கிலோ எடைப்பிரிவில் கென்யாவின் முவாங்கி தெரேசியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஷஷி சோப்ராவும் தன்னுடைய பிரிவில் ஆதிக்கம் செலுத்தினார். சிறந்த தாக்குதல் யுக்தியை கையாண்ட இந்திய வீராங்கனை ஷஷி தனது எதிரிக்கு மிகவும் வலிமையானவர் என்பதை நிரூபித்தார். இதையடுத்து 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் கிட்டோ மாயை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எதிர்கொள்கிறார். இதற்கிடையே மற்றொரு ஆட்டத்தில், 70 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ருதி யாதவ் 0-5 என்ற கணக்கில் சீனாவின் சோவ் பானுக்கு எதிராக போராடி தோல்வியடைந்தார்.