மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க அணி?
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ள 2023 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. ஏழாவது முறையாக இறுதிப் போட்டியை எட்டியுள்ள ஆஸ்திரேலிய அணி, இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐசிசி ஆடவர் மற்றும் மகளிர் உலகக்கோப்பைகளில் முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ள நிலையில், கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகும்.
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா புள்ளிவிபரங்கள்
இறுதிப்போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 150 ஆகும். இங்கு நடந்த 37 டி20 போட்டிகளில் சேஸ் செய்யும் அணிகள் 21 முறை வென்றுள்ளன. மகளிர் டி20இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இதுவரை ஒருமுறை கூட தோல்வியைத் தழுவியதில்லை. இதற்கிடையே நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் டஸ்மின் பிரிட்ஸ் 176 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் குவித்தவராக உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி (171 ரன்கள்) உள்ளார். ஆஸ்திரேலியாவின் மேகன் ஷுட் மற்றும் ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர்களாக உள்ளனர். இருவரும் தலா ஒன்பது விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.