ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரிங்கு சிங்கின் சிக்ஸர், ஏன்?
ஆஸ்திரேலிய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி. இத்தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 208 ரன்களைக் குவிக்க, 209 ரன்களைக் குவித்து வெற்றி வாகை சூடியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. இறுதிப்பந்து வரை சென்ற இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கடைசி ஒரு பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே தேவை என்னும் போது, ஒரு மாபெரும் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிக் கோட்டைத் தாண்ட வைத்தார் ரிங்கு சிங்.
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரிங்கு சிங்கின் சிக்ஸர்:
இறுதிப்பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்த போதும், அந்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமலேயே இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதிப்பந்தை ஆஸ்திரேலிய வீரர் சீன் அபாட் வீசிய போது, கோட்டைத் தாண்டி கால் வைத்துவிட்ட காரணத்தால், அது நோ பாலாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை எனும் போது, சீனா அபாட் நோ பால் வீசிய போதே இந்தியா வெற்றி பெற்று போட்டி நிறைவடைந்துவிட்டது. எனவே, 'போட்டி முடிந்த பின்பு' (அப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது) அடிக்கப்பட்ட ரிங்கு சிங்கின் சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், ஒரு பந்து மீதமிருக்கு 209 ரன்களை மட்டும் குவித்து இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.