7 ஓவர்களுடன் முகமது சிராஜை நிறுத்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) ஆசிய கோப்பையில் இலங்கையை 50 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு அற்புதமான பந்துவீச்சு மூலம் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெல்வதற்கு அடித்தளம் அமைத்தது. "இது போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படுவதைப் பார்க்கும்போது நான் மிகவும் திருப்தி அடைகிறேன். அனைத்து கேப்டன்களும் வேகப்பந்து வீச்சில் மிகவும் பெருமை கொள்கிறார்கள், நான் வேறுபட்டவன் அல்ல. அருமையான வேகப்பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம்." என போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் கூறினார்.
போட்டிக்கு பிறகு முகமது சிராஜ் குறித்து பேசிய ரோஹித் ஷர்மா
முகமது சிராஜுக்கு ஏழு ஓவர்கள் தொடர்ச்சியாக பந்துவீச வாய்ப்பு கொடுத்தது குறித்து பேசிய ரோஹித் ஷர்மா, சிராஜ் அட்ரினலின் அதிகமாக இருந்ததால் அவரை 5 ஓவர்கள் தாண்டியும் தொடர்ந்து பந்துவீச செய்ததாகவும் கூறினார். முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், அவர் 7 ஓவர் வீசிய பிறகு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அத்துடன் அவரை நிறுத்துமாறு கூறியதால் வேறு ஒருவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அவர் இதேபோல் செயல்பட்டதாகக் கூறினார்.