யார் இந்த ரிவாபா ஜடேஜா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!
ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி இரண்டு பந்துகளில் 10ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக பட்டம் வென்று அதிகமுறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்தது. இந்நிலையில், போட்டியை நேரில் காண வந்திருந்த ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி மற்றும் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். ரிவாபா ஜடேஜா எம்எல்ஏ என்பதால் அவரது பின்னணி குறித்து பலரும் தேடி வருகின்றனர்.
ரிவாபா ஜடேஜாவின் பின்னணி
1990 இல் ஹர்தேவ் சிங் சோலங்கி மற்றும் பிரபுல்லபா சோலங்கி ஆகியோருக்கு பிறந்த ரிவாபா ராஜ்கோட்டில் உள்ள ஆத்மியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அந்த நேரத்தில் ஜடேஜாவின் சகோதரி நைனா இவரது நல்ல தோழியாக இருந்ததால், ரவீந்திர ஜடேஜாவை ஒரு பார்ட்டியில் சந்தித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட, 2016 ஏப்ரல் 17 அன்று திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதியருக்கு 2017 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2019ல் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.