காயத்தில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியை வழிநடத்தப்போவது யார்?
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய ஆல்-ரவுண்டராகப் பார்க்ப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு வங்கேதச அணிக்கெதிரான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதனைத் தொடர்ந்து வந்த போட்டிகளில் அவர் பங்கெடுக்கவில்லை. மேலும், நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் வெளியேறியிருப்பதாக பிசிசிஐ அறிவித்திருக்கும் நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கெடுக்கும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்து குழுச்சுற்றில் இருந்தே வெளியேறியது. அதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவிற்குப் பதிலாக இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் கேப்டன்?
2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய அணியை கட்டமைத்து வருகிறது பிசிசிஐ. தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ள முடியாத ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அந்தத் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய டி20 அணியின் துணை-கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு?
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 19ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக அடுத்த தொடரில் பங்கேற்காமல் சூர்யகுமார் ஓய்வெடுக்கும் நிலையில், அவருக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. துணை கேப்டன் தான் என்றாலும், இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தியதில்லை. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டோ, சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.