கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு குஜராத்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். தந்தை அளித்த பேட்டியை, "ஸ்கிரிப்ட்" மற்றும் "முட்டாள்தனம்" என்று அழைத்த ரவீந்திர ஜடேஜா, இது தனது மனைவி ரிவாபாவின் இமேஜை "இழிவுபடுத்தும்" முயற்சி என்று கூறினார். அது மட்டுமின்றி என்று ஜடேஜா தனது எக்ஸ் பக்கத்தில், குஜராத்தி மொழியில் பதிவிட்டிருந்தார். "முட்டாள்தனமான பேட்டியில் கூறப்பட்டவை அனைத்தும் அர்த்தமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை...குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். என் மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கது...எனக்கும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் அதை பகிரங்கமாக பொதுவெளியில் சொல்ல மாட்டேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவீந்திர ஜடேஜாவின் தந்தை என்ன கூறியிருந்தார்?
ரவீந்திர ஜடேஜாவின் தந்தை, அனிருத்சிங் ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜடேஜா, தன்னுடனும்m அவரது சகோதரியுடனும் நல்லுறவைப் பேணவில்லை என்று குற்றம் சாட்டினார். அதோடு, ஜாம்நகரில் அவரது மகன் ரவீந்திரருக்கு பண்ணை வீடு இருப்பினும், இவர் தனியாக 2BHK அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாக கூறினார். "எனக்கு எனது கிராமத்தில் நிலம் உள்ளது. எனது மனைவியின் ₹ 20,000 ஓய்வூதியத்தில் இருந்து எனது செலவுகளை நான் நிர்வகிக்கிறேன். நான் 2BHK குடியிருப்பில் தனியாக வசிக்கிறேன். எனக்கு சமையல் செய்யும் ஒரு வீட்டு உதவியாளர் இருக்கிறார். நான் எனது சொந்த காசில் வாழ்கிறேன்" என தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு உறவில் விரிசல்
ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங், ரவீந்திர ஜடேஜாவின் திருமணத்திற்குப் பிறகு தான் நிலைமை இப்படி மாறியது என்று கூறினார். "ரவீந்திராவுக்கும் அவர் மனைவி ரிவாபாவுக்கும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை அழைப்பதில்லை, அவர்களும் எங்களை அழைக்கவில்லை. அவர்கள் திருமணமான இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கியது" "ரவீந்திரரை கிரிக்கெட் வீரராக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். பணம் சம்பாதிப்பதற்காக 20 லிட்டர் பால் கேன்களை தோளில் சுமந்து செல்வேன். வாட்ச்மேனாகக் கூட வேலை செய்திருக்கிறேன். அவனுடைய சகோதரி அதைவிட அதிகமாகச் செய்திருக்கிறார். அவனை, அவள் அவனை ஒரு தாயாகப் பார்த்துக் கொண்டாள். இருப்பினும், அவன் தன் சகோதரியுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை."
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி மீது குற்றம் சுமத்தும் மாமனார்
ரவீந்திராவின் மனைவி ரிவாபா குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதாக அனிருத்சிங் குற்றம் சாட்டினார். "கல்யாணம் ஆன மூணு மாசத்துல எல்லாத்தையும் அவங்க பெயருக்கு மாற்றணும்னு சொன்னாங்க. எங்கள் குடும்பத்தில் பிளவை உருவாக்கினாள். அவள் எங்கள் குடும்பத்தை விரும்பவில்லை, சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினாள். நான் கூறுவது தவறாக இருக்கலாம், நைனாபா (ரவீந்திரனின் சகோதரி) கூறுவதும் தவறாக இருக்கலாம். ஆனால் எங்கள் குடும்பத்தில் உள்ள 50 உறுப்பினர்களும் எப்படி தவறாக இருக்க முடியும்? குடும்பத்தில் யாருடனும் எந்த உறவும் இல்லை; வெறும் வெறுப்புதான் இருக்கிறது." "நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. ஐந்து வருடங்களாக நாங்கள் எங்கள் பேத்தியின் முகத்தை கூட பார்க்கவில்லை" என அவர் மேலும் கூறினார்.