சச்சின் டெண்டுல்கரின் எந்தெந்த சாதனைகளை முறியடித்திருக்கிறார் விராட் கோலி?
ஆசிய கோப்பைத் தொடரில், சில நாட்களுக்கு முன்பு மழையினால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்களைக் குவித்து அசத்தினார் விராட் கோலி. இத்துடன் ஒருநாள் தொடரில் 47 சதங்களைப் பூர்த்தி செய்திருக்கிரார் கோலி. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான 122 ரன்களுடன், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெயரையும் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறார் விராட் கோலி. இந்த சாதனையைத் தவிர, சச்சினுடைய வேறு எந்தெந்த சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறார் கோலி? பார்க்கலாம்.
அதிவேக 13,000 ரன்கள்:
பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்களைக் குவித்ததன் மூலமாக, வெறும் 267 இன்னிங்ஸ்களிலேயே 13,000 ரன்களைக் கடந்திருக்கிறார் விராட் கோலி. முன்னதாக இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களைக் குவிக்க 321 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், எந்தவொரு பேட்டரும், ஒருநாள் போட்டிகளில் 267 இன்னிங்களுக்கு முன்னதாக 11,000 ரன்களைக் குவிக்கவோ அல்லது 30 சதங்களுக்கு மேல் அடிக்கவோ இல்லை. ஆனால், கோலி ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களைக் குவித்ததோடு, 47 சதங்களையும் பூர்த்தி செய்திருக்கிறார். மேலும், இதுவரை ஐந்து பேட்டர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களைக் குவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேக 25,000 சர்வதேச ரன்கள்:
கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை ஆறு பேட்டர்கள் மட்டுமே அனைத்து பார்மெட்களிலும் சேர்த்து 25,000 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். அவர்களுள் அதிவேகமாக 25,000 ரன்களைக் கடந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் கோலி. கடந்த பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் அவர். 25,000 சர்வதேச ரன்களைக் குவிக்க 549 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் கோலி. முன்னதாக, இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், 25,000 சர்வதேச ரன்களைக் குவிக்க 577 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடங்களில், ரிக்கி பாண்டிங் (588), ஜாக்குவெல் காலிஸ் (594) மற்றும் குமார் சங்ககரா (608) ஆகியோர் இருக்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிய ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களையும், அதிக சதங்களையும் குவித்தவர்கள் பட்டியலில் தற்போதும் முதலிடத்திலேயே இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவர், பாகிஸ்தானுக்கு எதிரான 69 ஒருநாள் போட்டிகளில் 40.09 என்ற சராசரியில், ஐந்து சதங்களோடு, 2,526 ரன்களைக் குவித்திருக்கிறார். அதே நேரம் கோலியோ, பாகிஸ்தானுக்கு எதிரான வெறும் 15 ஒருநாள் போட்டிகளில் 55.16 என்ற சராசரியில் மூன்று சதங்களோடு 662 ரன்களைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 15 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் கோலி. 12 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருப்பது தென்னாப்பிரிக்க வீரரான டீ வில்லியர்ஸ்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் 463 இன்னிங்ஸ்களில், 44.83 என்ற சராசரியில், 18,426 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அடித்த 200 ரன்களை அடித்திருக்கிறார் டெண்டுல்கர். ஆனால், அது தான் ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் இரட்டைச் சதமாகும். மறுபுறம் கோலியோ, 279 இன்னிங்ஸ்களில், 57.38 என்ற சராசரியில் 13,027 ரன்களைக் குவித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 2012ம் ஆண்டு ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அடித்த 183 ரன்களே ஒருநாள் போட்டியில் கோலி குவித்த அதிகபட்ச ரன்களாகும்.