ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அக்சர் படேலுக்கு மாற்றாக களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்?
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குழுச் சுற்று மற்றும் சூப்பர் 4 என அனைத்து சுற்றுகளும் முடிவடைந்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாளை கொழும்புவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன. நேற்று நடைபெற்ற (செப். 15) சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியில் எட்டாவது பேட்டராகக் களமிறங்கி மதிப்புமிக்க 42 ரன்களைக் குவித்தார் இந்திய ஆல்ரவுண்டர் ஆக்சர் படேல். நேற்றைய போட்டியில் ஆடிய அக்சர் படேல் சிறு காயத்தைச் சந்திக்கவே, அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தரை கொழும்புவுக்கு அழைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அக்சர் படேலுக்கு மாற்றாகக் களமிறங்கவிருக்கிறாரா வாஷிங்கடன் சுந்தர்?
ஆசிய கோப்பைத் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறவில்லை. மாற்றாக, சீனாவிற்கு செல்லவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்திருந்தது பிசிசிஐ. அக்சர் படேலுக்கு மாற்றாக வாஷிங்கடன் சுந்தர் தான் விளையாடுவாரா என முழுமையாக தெரியவில்லை. ஆனால், காயம் காரணமாக அக்சர் படேல் நாளை விளையாடும் 11ல் இடம்பிடிப்பது கடினம் என்றே தகவல் வெளியாகியிருக்கிறது. கடைசியாக இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடினார் வாஷிங்டன் சுந்தர். அதன் பிறகு, அயர்லாந்துக்கு அனுப்பபட்ட இரண்டாவது டி20 அணியிலும் இடம்பெற்று, இரண்டு போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.