இந்தியாவில் உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதே தனது இறுதி இலக்கு என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். வலது கை பேட்டரான பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஜொலித்து வருகிறார். தற்போது ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாபர் முதலிடத்தில் உள்ளார் மேலும் 2022 ஆம் ஆண்டில் ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரர் விருதையும் கைப்பற்றினார். இந்நிலையில், கிரிக்கெட் பாகிஸ்தானிடம் பேசிய பாபர், நடப்பு பிஎஸ்எல் சீசனில் சதம் அடிப்பதும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது தனது இரண்டு முக்கிய இலக்குகள் என்று சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடுவது உறுதியா?
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என பிசிசிஐ அறிவித்து விட்டது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கோபத்தை ஏற்படுத்த, இந்தியா தங்கள் நாட்டுக்கு வராவிட்டால், நாங்களும் ஒருநாள் உலகக்கோப்பையை ஆட இந்தியா செல்ல மாட்டோம் என மிரட்டியது. இந்த விவகாரம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வரை சென்று தற்போது ஆலோசனையில் உள்ளது. இந்நிலையில், தற்போது பாபர் அசாம் கூறியுள்ள கருத்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து விளையாடுவது உறுதியாகியுள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.