ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 அன்று தொடங்கி அக்டோபர் 8 வரை தொடரும். அக்டோபர் 5 ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் தொடங்க உள்ளதால், இந்த போட்டிக்கு இரண்டாம் நிலை அணியை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ராகுல் டிராவிட் ஒருநாள் உலகக்கோப்பை அணியுடன் இருக்க வேண்டி உள்ளதால், இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தவிர, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகஸ்ட் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணத்திலும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இந்திய அணிக்கு தலைமையேற்கும் ருதுராஜ் கெய்க்வாட்
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஐசிசி சர்வதேச அந்தஸ்து இல்லை என்றாலும், பிசிசிஐ மிகவும் உறுதியான அணியை அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட், இளைஞர்கள் நிறைந்த இந்த அணியை வழிநடத்துவார். இந்திய ஆடவர் அணி: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, மற்றும் பிரப்சிம்ரன் சிங். காத்திருப்பு வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்சன்.