செப்டம்பரில் அதிரடி மாற்றம்! பிசிசிஐயின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமனம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் மாதத்தில் பிசிசிஐயின் முக்கியப் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அப்போது லட்சுமணன் கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய உயர் பொறுப்பில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாற்றங்கள்
செப்டம்பரில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்
இந்திய அணியின் மூத்த தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
அதேவேளையில், தேசிய அணியின் பயிற்சியாளர் குழுவின் செயல்பாடுகளும் தீவிர பரிசீலனையில் உள்ளன.
எனினும், அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை பிசிசிஐ நீட்டிக்கக்கூடும் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், ஒட்டுமொத்த கிரிக்கெட் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு லட்சுமணனுக்கு வழங்கப்படலாம்.
முக்கியத்துவம்
கிரிக்கெட் இயக்குநர் பொறுப்பின் முக்கியத்துவம் என்ன?
தற்போது பெங்களூரு மையத்தில் இளம் வீரர்களின் வளர்ச்சி மற்றும் உயர்தர பயிற்சித் திட்டங்களை லட்சுமணன் கவனித்து வருகிறார்.
புதிய பொறுப்பு வழங்கப்பட்டால், மூத்த இந்திய அணி, தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு மையம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை அவர் மேற்கொள்வார்.
முன்னதாக ராகுல் டிராவிட் விலகியபோது, இந்திய அணியின் முதன்மைப் பயிற்சியாளர் பதவியை ஏற்காமல் சிறப்பு பயிற்சி மையத்திலேயே தொடர லட்சுமணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் இளம் இந்திய அணியை இடைக்காலப் பயிற்சியாளராக வழிநடத்தி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்ற வைத்தது குறிப்பிடத்தக்கது.