ரூ.2.8 லட்சம் மாதச் சம்பளம்: போலி சான்றிதழ் கொடுத்து VP-ஆன நபர் மாட்டி கொண்ட கதை!
செய்தி முன்னோட்டம்
மத்திய பிரதேச மாநிலத்தில் போலியான பணி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்து, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் குழுத் துணைத் தலைவர் (Group Vice President) பதவியை பெற்று மாதம் ₹2.8 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தேவேந்திர குமார் துபே என்பவர், குவாலியரில் உள்ள 'ஸ்ரீதுல்ஜா பவானி ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் உயர்பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்காக தான் லேண்ட்மார்க் குரூப் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக மூன்று போலி அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் அவருக்கு அந்நிறுவனத்தில் குழுத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மோசடி
மாதம் ₹2.80 லட்சம் சம்பளமும் அம்பலமான மோசடியும்
உயர் பதவியில் சேர்ந்த தேவேந்திர குமார் துபே, மாதம் ₹2,80,670 சம்பளமாக பெற்று வந்தார்.
பின்னர் நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் லேண்ட்மார்க் குரூப் நிறுவனத்தில் ஒருபோதும் வேலை செய்யவில்லை என்பதும், அனைத்து சான்றிதழ்களும் போலியானவை என்பதும் அம்பலமானது.
இந்த சம்பவம் குறித்துக் குவாலியர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமித் சர்மா தலைமையிலான தனிப்படை திங்கள்கிழமை கான்பூரில் அதிரடி சோதனை நடத்தித் தேவேந்திர குமாரைக் கைது செய்தது.
போலி ஆவணங்களைத் தயாரித்தது எப்படி மற்றும் இதற்கு வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்துக் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.