தமிழ்நாட்டில் ஆண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பெண்களை விட ஆண்களின் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்து வருவதாகப் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது சுகாதாரத் துறை 2018 முதல் 2022 வரையிலான குடிமை பதிவு முறை தரவுகளை ஆய்வு செய்ததில், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 4,01,860 ஆண்களும், 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அதாவது பெண்களை விட 1,10,513 ஆண்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய இடைவெளி தொடர்கிறது.
புள்ளிவிவரங்கள்
வயது வாரியான புள்ளிவிவரங்கள்
வாழ்க்கையின் முக்கிய காலகட்டமான 15 முதல் 34 வயது வரையிலான பிரிவில் கடந்த ஆண்டில் 26,302 ஆண்களும், 10,638 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
35 முதல் 54 வயது வரையில் 86,328 ஆண்களும், 37,675 பெண்களும் இறந்துள்ளனர்.
வயது வாரியான இறப்பு விபரம்:
15-24 வயது: 9,167 ஆண்கள், 4,461 பெண்கள்
25-34 வயது: 17,135 ஆண்கள், 6,177 பெண்கள்
35-44 வயது: 31,585 ஆண்கள், 11,406 பெண்கள்
45-54 வயது: 54,743 ஆண்கள், 26,269 பெண்கள்
55-64 வயது: 81,840 ஆண்கள், 51,365 பெண்கள்
ஒப்பீடு
முதன்மைக் காரணங்களும் ஸ்வீடன் நாட்டு ஒப்பீடும்
சாலை விபத்துகள், தற்கொலை, புகையிலை மற்றும் மது பழக்கம், சரியான நேரத்தில் கண்டறியப்படாத இதயம், சிறுநீரகம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களே ஆண்களின் அதிகப்படியான உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
ஸ்வீடன் நாட்டில் ஆண், பெண் இறப்பு விகிதம் சமமாக (தலா 46,000) உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 65 வயதுக்கு முன்பே 42% பேர் உயிரிழக்கின்றனர்.
மேலும் 2025-ல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 41% மட்டுமே மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்டிருப்பது பெரிய தரவு இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக இருக்கும் ஆண்களின் இந்த அகால மரணங்கள், பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.