சச்சினுக்கு பிறகு இதை செய்யும் 2வது இந்தியர் : புதிய சாதனைக்கு தயாராகும் கோலி
மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்ததோடு, அந்த அணிக்கு எதிரான சிறந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தார். மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 191 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார். மேலும் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விஞ்சுவாரா விராட் கோலி?
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்கள் குவித்துள்ளார். அவரது இந்த சாதனை உடைக்க முடியாததாக கருதப்பட்ட நிலையில், தற்போது கோலி அதை நெருங்கி வருகிறார். டெண்டுல்கரை தவிர குமார் சங்கக்கார (14,234), ரிக்கி பாண்டிங் (13,704), சனத் ஜெயசூர்யா (13,430) ஆகியோர் மட்டுமே 13,000 ரன்களை கடந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்த மைல்கல்லை எட்டினால், கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்தவர் என்ற சிறப்பையும் பெறுவார். 321 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை டெண்டுல்கர் படைத்துள்ள நிலையில், கோலி தற்போது 262 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்களில் கோலி (46) டெண்டுல்கருக்கு (49) அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.