கேப்டனாக தோல்வியடைந்தேன் : மனம் திறந்த விராட் கோலி
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தாலும், தான் கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் கோலியும் ஒருவர். அவர் இந்தியாவுக்கு பல முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இருப்பினும், அவரது தலைமையில் இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், சனிக்கிழமையன்று (பிப்ரவரி 25) ஆர்சிபி போட்காஸ்டில் பேசிய கோலி, ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியாததால் தன்னை தோல்வியுற்ற கேப்டன் என்று கருதுவதாகக் கூறினார். ஐசிசி கோப்பைகள் மட்டுமல்லாது, ஐபிஎல் தொடரிலும் அவர் இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியுடனான பிணைப்பு குறித்து பேசிய கோலி
2021 சமயத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு கோலி மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டார். பேட்டிங்கில் கூட அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 2022 ஆசிய கோப்பையில் தான் அவர் தனது இழந்த ஃபார்மை மீட்டெடுத்தார். அதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்தார். அந்த போட்டிக்கு முன், கோலி தோனியுடனான தனது நீண்ட கால உறவு குறித்து பேசினார். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், தோனி மட்டுமே அவரைத் தொடர்பு கொண்டதாக அப்போது தெரிவித்தார். முன்னதாக, 2014 ஆம் ஆண்டில், தோனி இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை கோலி ஏற்றது குறிப்பிடத்தக்கது.